இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கையின் தேர்தல் முறைமைகள்

அரசியலமைப்பின் 4(அ) உறுப்புரையின் பிரகாரம், குடியரசின் அதியுயர் சட்டமென்ற முறையில் மக்களின் சட்டவாக்க அதிகாரமானது, தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படுகிறது. தேருநர்கள் முறை தொடர்பான அடிப்படை ஏற்பாடுகள் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

வாக்குரிமையும் தேர்தல்களும் தொடர்பான ஏற்பாடுகள் அரசியலமைப்பின் XIV ஆம் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.


வாக்குரிமை


வாக்குரிமை அல்லது தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை என்பது அரசியலமைப்பு ஏற்பாடுகளின்படி எதிர்மறை வடிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 88 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஒவ்வொருவரும், அரசியலமைப்பில் குறிப்பிட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் தகைமையற்றவரானாலொழிய, தேருநராக அல்லது வாக்காளராகத் திகழ்வதற்குத் தகுதியுடையவராவார். மேலும், இங்கு குறிப்பிடப்படுவதாவது அத்தகைய ஆள் எவரும், அவரது பெயர் தோதான தேருநர் இடாப்பில் பதியப்பட்டிருந்தால்தான் வாக்களிப்பதற்கு உரித்துடையவராவார். எனவே, இதனடிப்படையிலேயே உரிமையைப் பிரயோகிக்கும் வாய்ப்புத் தங்கியுள்ளது. தேருநர் இடாப்புக்களைத் தயாரிப்பது தொடர்பான விடயங்களை தேருநர்களை பதிவுசெய்வதற்கான சட்டம் கொண்டுள்ளது. இதில் ஒவ்வொரு பதிவுப்புத்தகத்தையும் வருடாந்தம் மீளாய்வு செய்தல், யாரையாவது பதிவு செய்வது தொடர்பாக ஏதாவது ஆட்சேபனைகளிருப்பின் அவற்றைத் தெரிவிப்பது ஆகியவையும் ஏனையவற்றிற்கிடையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஒருவர் தேருநராகவோ அல்லது வாக்காளராகவோ பதிவு செய்துகொள்வதற்கான பின்வரும் தகைமையீனங்களை அரசியலமைப்பின் உறுப்புரை 89 கொண்டுள்ளது.


  1. அவர் இலங்கைப்பிரசை அல்லவெனில்.
  2. தேருநர்களைப் பதிவு செய்வதற்கான சட்டத்தின் பிரகாரம் குறித்துரைக்கப்படும் தகைமை பெறும் திகதியன்று பதிவுசெய்வதற்காக பதினெட்டு வயதினை அடையாதவராக இருத்தல்.
  3. வலுவுடையதாகவிருக்கும் சட்டத்தின் பிரகாரம் சித்தசுவாதீனமற்றவரெனக் காணப்பட்டால்.
  4. இரண்டாண்டுகளுக்குக் குறையாதவொரு காலத்திற்கான சிறைத்தண்டனையால் தண்டிக்கப்படக்கூடிய தவறொன்றுக்காக ஏதேனும் நீதிமன்றத்தினால் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்னர் அதனால் விதிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குக் குறையாத ஒரு காலத்திற்கான சிறைத்தண்டனையை இப்போது அனுபவித்து வருபவராயிருந்தால் அல்லது நேர்முற்போந்த ஏழு ஆண்டு காலப்பகுதியின் போது அத்தகைய தண்டனையை அனுபவித்து முடித்தவராயிருத்தல்.
  5. அவ்விதமான நபரொருவர் பதிவுசெய்யப்பட்ட திகதியிலிருந்து ஏழாண்டு காலப்பகுதிக்குள் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக, சனாதிபதி தேர்தல் தொடர்பாக, அல்லது ஏதாவது சர்வசன வாக்கெடுப்பு தொடர்பாக தேர்தல் குற்றமொன்றுக்குக் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டிருத்தல்.
  6. எவரேனும் ஆள் மேற்குறிப்பிட்ட சட்டம் (5) இல் குறிப்பிட்டவாறு ஏதாவது குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டிருத்தல் அல்லது அதன் பிரகாரம் ஏதாவது துஷ்பிரயோக நடவடிக்கைகளில் குற்றவாளியாகக் காணப்படல், அல்லது இலஞ்ச குற்றச்சாட்டின் பெயரில் குற்றவாளியாகக் காணப்படல்.
  7. அத்தகைய ஆளொருவர் உள்ளூரதிகாரசபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள பிரிவுகளின் ஏற்பாடுகளின் பிரகாரம் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்தாண்டு காலம் கழியாதிருத்தல்.
  8. மேற்படி (5) இல் குறிப்பிட்டுள்ளவாறு வேறு ஏதாவது சட்டத்தின் கீழ், சட்டவிரோதமான பழக்கங்களில் ஈடுபட்டு ஆளொருவர் குற்றவாளியாகக் காணப்பட்ட காலத்திலிருந்து மூன்றாண்டு காலம் கழியாதிருத்தல்.
  9. அரசியலமைப்பின் பிரகாரம் விசேட சனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் அடிப்படையில் குடியியல் தகுதியீனம் விதிக்கப்பட்டிருத்தல்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2013-04-03 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom